செ.தி.பெருமாள்
பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக வலை விரித்து மரை ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்ற இருவர் பொலிஸாரால் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தச் சந்தேக நபர்கள் பிடிபட்டனர். இவர்கள் இருவரும் செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்ட மரை இறைச்சியில் ஒரு பகுதியைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், எஞ்சியிருந்த 10 கிலோ கிராம் இறைச்சியைப் பொலித்தீன் பைகளில் மறைத்து வைத்து, பொகவந்தலாவையிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
சம்பவம் குறித்துப் பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நுவன் மதுசங்க தெரிவிக்கையில், “கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
அரிய வகை வனவிலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைச் சட்டவிரோதமாக விற்பனை செய்த இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







