Last Updated:
மத்திய பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற உலக பாரம்பரிய தலமான கஜூராவோ நகரில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளுடன் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
மத்திய பிரதேசத்தில் ரயிலில் தீ பிடித்ததாகப் பரவிய வதந்தியை நம்பி வெளியே குதித்தவர்கள் மீது மற்றொரு ரயில் மோதிய கோர விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்… விபத்து நேர்ந்தது எப்படி…?
மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய கோர காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற உலக பாரம்பரிய தலமான கஜூராவோ நகரில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளுடன் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் மொரேனா மாவட்டத்தின் தேஜம்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ஒரு பெட்டியில் செல்போன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக திடீரென பயணிகள் மத்தியில் வதந்தி பரவியது.
இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் உறைந்திருந்தனர். அப்போது, பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க, நடுக்கத்தில் இருந்த பயணிகள் உடனே வெளியே குதிக்கத் தொடங்கினர். அவ்வாறு குதித்தவர்களில் சிலர் அருகில் இருந்த தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் பதால்கோட் எக்ஸ்பிரஸ் (Patalkot Express) ரயில் வேகமாக எதிர்திசையில் வந்துகொண்டிருந்தது. ஆக்ராவில் இருந்து வந்த அந்த ரயில் தேஜம்பூர் ரயில் நிலையம் அருகே வளைவில் திரும்பியபோது, அங்கு தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிச் சென்றது. ரயில் மோதிய வேகத்தில் பெண்கள், குழந்தைகள் எனப் பலர் தூக்கிவீசப்பட்ட நிலையில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் கணவர் கண்முன்னே மனைவி, 4 வயது மகன் பலியான சம்பவம் சோகத்தின் உச்சம். தகவல் அறிந்து சென்ற ரயில்வே காவல் துறையினர் படுகாயம் அடைந்த பலரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அதில் நான்கு பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வதந்தி காரணமாக ரயில் பயணிகள் இறப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2024ஆம் ஆண்டு ராஞ்சியிலிருந்து பிகார் சென்ற ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியை நம்பி ரயிலில் இருந்து குதித்த பயணிகள் மீது சரக்கு ரயில் மோதி மூவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த விதமான வதந்திகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


