வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு
கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை காவல்துறையினர் திருட்டில்
ஈடுபடுவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும்
தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வேலணை பிரதேசத்தை நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த மாடு கடத்தல்
மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 7 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர்
தெரிவித்தனர்
ஊர்காவற்றுறை காவல்துறையினர் வெளியிட்ட தகவல்
இது குறித்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் கூறுகையில் -
வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில்,
நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை
உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த
இரு நாள்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த நிலையில்,
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை,
பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில் இருவர் நேற்றையதினம் (13) கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த திருட்டுக்களின் பிரதான சூத்திரதாரியான கஜவதன் என்பவர்
வேலணை வங்களாவடியில் வைத்துக் இன்று கைது செய்யப்பட்டிருந்ததுடன் அதன்
தொடர்ச்சியாக மொத்தமாக ஏழு நபர்கள் கைதாகியுள்ளனர்.
பிரதான சூத்திரதாரி ஹெரோயினுடன் கைது
குறிப்பாக பிரதான சூத்திரதாரியான கஜவதன் என்பவர் கைதாகும்போது அவரிடமிருந்து
2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் காவல்துறை அத்தியட்சகர் -2 தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த
நடவடிக்கையில், ஊர்காவற்றுறை தலைமை காவல்துறை அதிகாரி அஜித்குமார், ஊர்காவற்றுறை
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் ஆகியோரது பிரசன்னத்துடன் குறித்த
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வேலணையில் மாடு திருட்டு உள்ளிட்ட திருட்டுக்கள் குறையும்
இது குறித்து ஊர்காவற்றுறை காவல்துறை அதிகாரி கூறுகையில் -
வேலணையில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு மக்களுக்கு பெரும் அசௌகரியங்கள்
மற்றும் பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தி வந்த இந்த கும்பல் காவல்துறைக்கு
நீண்ட நாள்களாக டிமிக்கி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் திருட்டை இல்லாதொழிக்கும் இறுக்கமான நடவடிக்கையில் காவல்துறையினர்
தீவிரமாக ஈடுபட்டநிலையில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
இதனால் வேலணையில் மாடு திருட்டு உள்ளிட்ட திருட்டுக்கள் குறையும் என
நம்புகின்றோம்.
இதேவேளை இவ்வாறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது மிக
கடுமையான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் இவ்வாறான
சம்பவங்களுடன் தொடர்புடையவர்களது தகவலை காவல்துறைக்கு வழங்குமாறும்
கேட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

