Last Updated:
PM-KISAN | 23-வது தவணை ₹2,000 பெற இ-கே.ஒய்.சி மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம்.
விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் கவுரவ நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத் தொகையை தொடர்ந்து பெற, ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கவும், இ-கேஒய்சி (e-KYC) விவரங்களை புதுப்பிக்கவும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமர் கிசான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.6,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் 22 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தவணைத் தொகை ஆதார் அடிப்படையில் வழங்கப்படுவதால், இ-கேஒய்சி விவரங்களை புதுப்பிக்காதவர்கள் மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காதவர்களுக்கு அடுத்த தவணைத் தொகை வழங்கப்படாது.
எனவே, தகுதியிருந்தும் தவணைத் தொகை பெறாத விவசாயிகள், வேளாண்மைத் துறையை அணுகியோ அல்லது PM-KISAN இணையதளத்தில் தங்களது பயனாளர் விவரங்களை சரிபார்த்து திருத்தியோ, 23-வது தவணைத் தொகையைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 6,000 விவசாயிகள் இ-கேஒய்சி செய்யாமல் உள்ளனர். மேலும், 3,100 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காதவர்கள் தங்களது வங்கி கிளையை அணுகி இணைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மாற்றாக, அஞ்சல் நிலையங்களை அணுகி புதிய அஞ்சலக சேமிப்பு கணக்கைத் தொடங்கியும் பயன்பெறலாம்.
ஆதார் எண்ணுடன் அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகள், PM-KISAN இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்து, OTP மூலம் இ-கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யலாம். மேலும், பொது சேவை மையங்கள் (CSC) மூலமாக பயோமெட்ரிக் முறையிலும் பதிவு செய்யலாம்.
அதேபோல், வட்டார வேளாண்மை அலுவலர்களை அணுகி மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள PM-KISAN செயலி (App) மூலமாகவும் இ-கேஒய்சி செய்து கொள்ளலாம். தகுதியுடைய விவசாயிகள் அனைவரும் வேளாண்மை விரிவாக்க மையங்கள், பொது சேவை மையங்கள் அல்லது வங்கிகளை அணுகி தங்களது இ-கேஒய்சி மற்றும் ஆதார்-வங்கி கணக்கு இணைப்பு பணிகளை விரைவாக முடித்து, 23-வது தவணைத் தொகையை பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


