
எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை, உவர்மலை சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுமானங்கள், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் உத்தரவுக்கமைய இன்று (12) காலை ஆலய நிர்வாகத்தினால் அகற்றி அகற்றப்பட்டன.
உவர்மலை சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தின் வசந்த மண்டபத்திற்கான கட்டுமானப் பணிகள் கடந்த வாரம் முதல் இடம்பெற்று வந்தன. இக்கட்டுமானங்களுக்குக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை உடனடியாக அகற்றுமாறு ஆலய நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தனர். இதனையடுத்து, குறித்த நிரந்தரக் கட்டுமானங்கள் இன்று ஆலய நிர்வாகத்தினரால் இடித்து அகற்றப்பட்டன.
குறித்த பகுதியில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் இடம்பெறுவதாகப் பல தரப்பினருக்கும் முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாகத் தெரியவருகிறது. கடந்த சில மாதங்களாகவே திருகோணமலை கடற்கரைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் புத்தர் சிலை விவகாரம் பேசுபொருளாக இருந்து வருகிறது. இதனிடையே, கடற்கரையை அண்மித்த பல சட்டவிரோதக் கட்டுமானங்கள் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளினால் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







