இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவாக பேராக், ஈப்போவில் அமையவிருக்கும் தொல்காப்பியத் திருக்கோட்டம், அவருக்குச் செய்யப்படும் பெருமை மட்டுமல்ல; இது ஒட்டுமொத்த தமிழ் மொழிக்கும், தமிழினத்தின் தொன்மைக்கும் நாம் செய்யும் பெருமையாகும். அவருக்காக செய்யும் இந்த பணி தமிழின் அடையாளத்தைப் போற்றும் அறப்பணி என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்கள் சிறப்பித்துப் பேசினார்.
கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற, கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுகூரும் விழா, ‘சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்’ எழுப்பும் திட்ட விழாவில் தலைமை தாங்கிப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர் உலகின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்தை, வருங்கால சந்ததியினர் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைத்துக் கொடுத்த கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் தமிழ்ப்பணியை நெஞ்சாரப் பாராட்டினார். இத்தகைய அறிஞர்களைக் கௌரவிப்பதும், அவர்களின் இலட்சியக் கனவுகளை நனவாக்குவதும் தமிழர்களின் கடமையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.


இந்தத் திருக்கோட்டம் வெறும் கட்டிடமாக மட்டும் அமையாமல், பாலர் பள்ளியுடன் இணைந்து தமிழ் இலக்கணத்தையும், மொழியையும் வளர்க்கும் ஒரு கல்விப் பேழையாகத் திகழ வேண்டும் என்றும், அதற்குத் தமிழர்கள் அனைவரும் தாராளமாக நிதி உதவி வழங்கி ஆதரவு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, தொல்காப்பியத் திருக்கோட்டத்தின் செயலவை ஆலோசகர் டத்தோஸ்ரீ முகம்மது இக்பால் அவர்கள் நோக்கவுரையாற்றினார். கட்டிடக் குழுத் தலைவர் ப. தமிழ்மாறன் அவர்கள், 850,000 ரிங்கிட் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இத்திட்டத்தின் அவசியம், பணிகள் குறித்து விரிவாக விளக்கவுரை ஆற்றினார். இந்நிகழ்வில் கவிஞரின் பற்றாளர்கள் உள்ளிட்ட சமூகப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு வழங்கினர். விழாவின் நிறைவாக, கட்டிடக் குழு செயலாளர் வீ.கே. பிரபு நன்றியுரை வழங்கினார்.
ராமேஸ்வரி ராஜா




