மும்பையைச் சேர்ந்த பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரனீத் மோரேயின் நிகழ்ச்சியில், பெண் மருத்துவர் செஜால் பவார் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள கே.இ.எம். (KEM) மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் செஜால் பவார், பிரனீத் மோரேயின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மருத்துவ மாணவர்களின் கல்விக்காகப் பயன்படுத்தப்படும் ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை ஒப்பிட்டு நானும் எனது தோழிகளும் கேலி பேசிக் கொள்வோம்” என்று கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, மருத்துவத் துறையில் இருக்கும் ஒருவர், உடலைத் தானமாக வழங்கியவர்களின் சடலங்களை இவ்வளவு உணர்வற்ற முறையில் கேலி செய்யலாமா? எனப் பலரும் கேள்வி எழுப்பினர். மருத்துவக் கல்விக்காகத் தாமாக முன்வந்து உடலைத் தானம் செய்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய கீழ்த்தரமான கருத்தைத் தெரிவித்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், டாக்டர் செஜால் பவார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்புக் கோரி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“வைரலாகப் பரவி வரும் எனது பேச்சு குறித்து மக்கள் ஏன் அதிருப்தி அடைந்தார்கள் என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம் குறித்து எனது கருத்துகள் தவறான முறையில் வெளிப்பட்டுவிட்டன. யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை என்றாலும், நோக்கத்தை விட அதன் தாக்கமே முக்கியம் என்பதை நான் உணர்கிறேன். என் வார்த்தைகளை நியாயப்படுத்தவோ அல்லது விளக்கமளிக்கவோ நான் விரும்பவில்லை; இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். என் வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தியிருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது. இனி வரும் காலங்களில் நான் பேசும் விதத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடன் இருப்பேன். இந்த வீடியோவால் வருத்தமடைந்த அல்லது காயப்பட்ட அனைவரிடமும் நான் உண்மையாகவே மன்னிப்பு கோருகிறேன். இது போன்ற சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காது” என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

