Last Updated:
பேட்ரிக் புரூயல் 13 பெண்களின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகரும், முன்னணி நடிகருமான பேட்ரிக் புரூயல் 13 பெண்களின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் 1980 மற்றும் 1990களில் பாப் இசையில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் 67 வயதான பேட்ரிக் புரூயல். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். அதிகம் விற்பனையான ஆல்பங்களுக்கு சொந்தக்காரர் இவர். கடந்த 1997, 2000 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் பேட்ரிக் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்று பெண்கள் புகார் அளிந்திருந்தனர்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த புகார்களின் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து என பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களும் தங்களுக்கு பேட்ரிக்கால் நேர்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்களை வாக்குமூலமாக அளித்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் புகார்கள் குவிந்த நிலையில், 13 பெண்களின், பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதுவே பேட்ரிக் புரூயல் கைது செய்யப்பட முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் 1997 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸ் மற்றம் பெல்ஜியத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பேட்ரிக் புரூயல், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் ஒரு பெண்ணை ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை. தான் ஒருபோதும் போதை மருந்து கொடுத்ததில்லை, தந்திரமாக கையாண்டதில்லை அல்லது யாரையும் அடிபணியச் செய்ய முயன்றதில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.
தொலைக்காட்சி தொகுப்பாளரும் பத்திரிகையாளருமான ஃபிளேவி ஃபிளேமென்ட், பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றில் கடந்த மாதம் பகிரங்க குற்றம் சாட்டு ஒன்றை வெளிப்படுத்தினார். அதில், 1991-ஆம் ஆண்டு, தனக்கு 16 வயதாக இருந்தபோது பாரிஸில் ப்ரூயல் தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருந்தார். அதன்பிறகுதான், இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் முதன்முதலில் வெளிவந்தன. உண்மை வெளிவர வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அவர் அப்போது வலியுறுத்தியிருந்தார்.
அதேநேரம் முழுமையான சம்மதத்துடன் தான் அவர்களது சந்திப்பு நிகழ்ந்ததாகவும், போதைப்பொருளோ, வற்புறுத்தலோ நிகழவில்லை என்றும் ப்ரூயலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். புரூயல் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த மாதம் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் கனடா நாடுகளில் நடைபெற இருந்த சர்வதேச சுற்றுப்பயணத் திட்டத்தின் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளார். கடந்த வாரம், பாரிஸில் உள்ள எட்வார்ட் VII திரையரங்கில் அவரது மேடை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிகழ்ச்சியின் இறுதி ஐந்து நாட்களை ரத்து செய்யப்பட்டன.
1959-ல் அல்ஜீரியாவில் பேட்ரிக் பெங்குய்குய் என்ற பெயரில் பிறந்த ப்ரூயல், 1980-களில் Marre de cette nana-போன்ற வெற்றிப் பாடல்கள் மூலம் புகழ்பெற்றார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு, கடந்த ஒரு மாதமாக பிரெஞ்சு செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்திருப்பதால் பேட்ரிக் புரூயலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
Patrick Bruel | 13 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. பிரபல நடிகர் பேட்ரிக் புரூயல் மீது குவியும் புகார்கள்!

