Last Updated:
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று சாதனை மிக்க ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஆகியவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டிங் பிரிவில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தனது முதலிடத்தை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜோ ரூட் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்த சுமாரான ஃபார்ம் காரணமாக அவர் 29 புள்ளிகளை இழந்து, முதலிடத்திலிருந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஜோ ரூட்டிற்கு இது ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், அவரது சக இங்கிலாந்து வீரரான ஹாரி புரூக் அசாத்திய வளர்ச்சி கண்டு உலக அளவில் நம்பர் 1 டெஸ்ட் பேட்டராக உருவெடுத்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 140 ரன்களுக்கு சுருண்டபோதும், புரூக் அதிரடியாக 56 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த போதிலும், புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 8-வது இடத்திற்கு முன்னேறி, தற்போது டெஸ்ட் தரவரிசையில் மிக உயர்ந்த இடத்தை வகிக்கும் இந்திய பேட்டராக மாறியுள்ளார். இதன் மூலம் அவர் சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை (9-வது இடம்) பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடாததால் சில புள்ளிகளை இழந்தாலும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோரை விட முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்தின் மாட் ஹென்றி 4-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்குச் சரிந்ததால், ஸ்காட் போலண்ட், மார்கோ யான்சென் மற்றும் நோமன் அலி ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையைப் பொறுத்தவரை, எந்த மாற்றமும் இன்றி இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தான் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும், மற்ற வீரர்களை விடப் புள்ளிப் பட்டியலில் நீண்ட இடைவெளியில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

