Last Updated:
பாகிஸ்தானின் இந்த திடீர் விண்வெளிப் பாய்ச்சலுக்குப் பின்னால் சீனா உந்துசக்தியாகச் செயல்பட்டுள்ளது.
சீனாவின் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு உதவியுடன், பாகிஸ்தான் தனது விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்புத் திறனை மேம்படுத்தி, இந்தியப் பகுதிகளைக் கண்காணித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாகிஸ்தான் கடந்த 16 மாதங்களில் (ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2026 வரை) மிகக் குறுகிய கால இடைவெளியில் ஆறு பூமி-கண்காணிப்பு (Earth-observation) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, தனது விண்வெளி உளவுத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
சீனாவின் முழுமையான தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் கூட்டமைப்பு, இந்தியப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் நோக்கம் கொண்டது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகிஸ்தான் 1961-ல் விண்வெளி மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையத்தை (SUPARCO) நிறுவியதில் இருந்து மிகக் குறைந்த செயற்கைக்கோள்களையே ஏவியிருந்தது. ஆனால், சமீபத்திய 16 மாத காலத்திற்குள் ஆப்டிகல் இமேஜிங், ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் மற்றும் ரிமோட் சென்சிங் திறன் கொண்ட 6 அதிநவீன செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. இவையனைத்தும் கடந்த ஆண்டு நடைபெற்ற பகல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கைகளுக்கு முன்பாகவே ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் இணைந்து, சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்தியப் பகுதிகளைக் கண்காணிக்கும் திறனைப் பெற்றுள்ளன. இந்தியாவின் ராணுவ நடமாட்டங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் இந்தியாவை நோக்கி வரும் வணிகக் கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இவை மிகத் துல்லியமான புகைப்படங்களை எடுப்பதுடன், மறைத்து வைக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்களைக் கண்டறியும் திறன் கொண்டவை. குறிப்பாக, 2025 அக்டோபரில் ஏவப்பட்ட எச்எஸ்-1 (HS-1) செயற்கைக்கோள், சாதாரண கேமராக்களால் கண்டறிய முடியாத பொருட்களைக் கண்டறியும். மேலும், சமீபத்திய பிஆர்எஸ்சி-இஓ2 (PRSC-EO2) மற்றும் பிஆர்எஸ்சி-இஓ3 (PRSC-EO3) செயற்கைக்கோள்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவை ஆகும்.
பாகிஸ்தானின் இந்த திடீர் விண்வெளிப் பாய்ச்சலுக்குப் பின்னால் சீனா உந்துசக்தியாகச் செயல்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை சீனாவின் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டதுடன், சீன நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவானவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


