கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை தடிமனான பணப்பை, வங்கி வரிசைகள், அரசு அலுவலகங்களில் ஆவணங்களுக்காகக் காத்திருப்பது போன்றவை இந்தியர்களின் இயல்பான வாழ்க்கையாக இருந்தது. ஆனால் இன்று, ஒரு எளிய தேநீர் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை ஸ்மார்ட்போன் மூலமாகவே அனைத்தும் சாத்தியமாகியுள்ளது.
மோடி அரசின் இந்த 12 ஆண்டுகால சாதனைகளில் மிக முக்கியமானது, சாமானியர்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களை நாட்டின் பொருளாதார மற்றும் நிர்வாக சக்தியாக மாற்றியதுதான்.
இந்தியாவின் சில்லறைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இன்று யூபிஐ (UPI) மாறியுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் யூபிஐ மூலம் 20,000 கோடிக்கும் (200 Billion) அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 314 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நாட்டின் 85 சதவீத சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன.
இந்த டிஜிட்டல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது ஜன்தன் – ஆதார் – மொபைல் (JAM – Jan Dhan-Aadhaar-Mobile) கட்டமைப்பு ஆகும். கோடிக்கணக்கான மக்களுக்குத் தொடங்கப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகள் மற்றும் பயோமெட்ரிக் அடையாள அட்டை ஆகியவை ஏழை எளிய மக்களையும் முறையான பொருளாதார அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளன.
மோடி அரசின் மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்தம் நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer – DBT) ஆகும். அரசின் மானியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர்கள் அல்லது அதிகாரத்துவத் தாமதங்கள் இன்றி நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே மாற்றப்படுகின்றன. இதுவரை பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ₹44 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் போலிப் பயனாளிகள் ஒழிக்கப்பட்டு, முறைகேடுகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன.
காகித ஆவணங்களைச் சுமந்து செல்லும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட டிஜிலாக்கர் (DigiLocker) தற்போது 53 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழ்கள், பான் (PAN) அட்டை போன்றவற்றை இதன் மூலம் டிஜிட்டல் முறையில் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
அதேபோல், நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தையும், எரிபொருள் விரயத்தையும் குறைக்க பாஸ்டேக் (FASTag – RFID தொழில்நுட்பம்) முறை கொண்டு வரப்பட்டு, இன்று நாடு முழுவதும்Universal ஆக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் தடுப்பூசி மேலாண்மை அமைப்பாக கோவின் (CoWIN) தளம் செயல்பட்டது. மேலும், வருமான வரித் தாக்கல் ஆன்லைன் மயமாக்கப்பட்டதன் மூலம் வரி செலுத்துவோரின் பணிகள் எளிதாக்கப்பட்டுள்ளன. உமாங் (UMANG) போன்ற செயலிகள் மூலம் ஆயிரக்கணக்கான அரசுச் சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே மொபைலில் பெற முடிகிறது.
இந்தியாவின் இந்த ‘இந்தியா ஸ்டாக்’ (India Stack) டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மாதிரி இன்று சர்வதேச அளவில் பாராட்டப்பட்டு, பிற நாடுகளாலும் உற்றுநோக்கப்படுகிறது. இந்தியாவின் யூபிஐ கட்டமைப்பு தற்போது பல நாடுகளுக்கும் விரிவடைந்து, எல்லை கடந்த பரிவர்த்தனைகளுக்கும் வழிவகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

