இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது-
“சேவை, நல்லாட்சி மற்றும் வளம்” ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எங்களது இலக்கு.
அரசின் முக்கிய சாதனையாக, 81 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருவதை குறிப்பிடலாம். மேலும், பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் அதிகமான வீடுகளும், உஜ்வலா திட்டத்தின் கீழ் 10.5 கோடிக்கும் அதிகமான எல்பிஜி (LPG) எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
பெண்களுக்காக 32 கோடிக்கும் அதிகமான ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், லக்பதி திதி’ (Lakhpati Didi) திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடி பெண்கள் ஆண்டுக்குக் குறைந்தது 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நிலையை எட்டியுள்ளனர். அத்தோடு, 91 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவிக் குழுக்கள் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் (Permanent Commission) வழங்கப்பட்டதையும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அடல் சேது, சுதர்சன் சேது, செனாப் ரயில் பாலம், பம்பன் கடல் பாலம் போன்ற பிரம்மாண்ட திட்டங்கள் இதில் அடங்கும். நாட்டின் மெட்ரோ ரயில் கட்டமைப்பு 26 நகரங்களில் 1,100 கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளதுடன், 164 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 164 ஆக உயர்ந்துள்ளது.
இளைஞர்களின் திறனை மேம்படுத்த 2 கோடி பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஸ்டார்ட்-அப் (Startup) சூழல் வலுவடைந்து, தற்போது 2.2 லட்சத்திற்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பயனளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 19,000-க்கும் மேற்பட்ட ஜன மையங்கள் மூலம் 90% வரையிலான தள்ளுபடியில் மலிவு விலை மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.38,400 கோடியாக உயர்ந்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடிமைத்தனத்தின் அடையாளங்களை ஒழிக்கும் விதமாக ‘ராஜ்பத்’ சாலை ‘கர்தவ்யா பத்’ என மாற்றப்பட்டதுடன், சத்ரபதி சிவாஜி மகாராஜின் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட புதிய கடற்படைக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பட்டியலிட்டுள்ளார்.

