சராசரி ஆயுட்காலம் உயர்வு:
நேருவின் ஆட்சிக் காலத்தில் (1964-ல்), சுதந்திரப் போராட்ட நேரத்தில் ஏற்பட்டிருந்த பல்வேறு பின்னடைவுகளிலிருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியிருந்தது. அதனால் அக்காலகட்டத்தில் அதிகப்படியான குழந்தை இறப்பு, குறைவான மருத்துவ வசதிகள் மற்றும் தொற்றுநோய்களின் கடுமையான பாதிப்புகள் ஆகியவை இருந்தன. பிறப்பின் போதான சராசரி ஆயுட்காலமும் 41 என்றே இருந்தது. இருப்பினும் நேரு ஆட்சி தொடங்கிய அடுத்தடுத்த தசாப்தங்களில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு, தடுப்பூசி வரம்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ வசதிகளில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதனை பிரதிபலிக்கும் வகையில், 2024-26 இல் இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் 70.4 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து நாடு பெற்ற முக்கிய வளர்ச்சியில் ஒன்றாக, மிக முக்கியமான பொதுச் சுகாதார சாதனைகளில் இது முக்கியமானதாக உள்ளது.
- ஆண்கள்: 1951-ல் சராசரியாக 37.2 ஆண்டுகளும், 2014-18ல் 68.2 ஆண்டுகள் என்றும் உள்ளன.
- பெண்கள்: 1951 சராசரியாக 36.2 ஆண்டுகளும், 2014-18ல் 70.7 ஆண்டுகள் என்றும் உள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு ஆரம்பத்தில் இந்திய ஆண்களின் சராசரி ஆயுட்காலம் சற்று அதிகமாக இருந்தபோதிலும், தற்போது உலகளாவிய உயிரியல் போக்குகளுக்கு ஏற்ப, சராசரி இந்தியப் பெண் ஆணைவிட சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்.
ஆயுட்காலம் இந்த அளவிற்கு வரலாற்று ரீதியாக இரட்டிப்பாக உயர்ந்ததற்கு, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களே முக்கியக் காரணமாகும்.

சராசரி இறப்பு விகிதத்தில் சரிவு!
- பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளது போலவே இறப்பு விகிதத்தில் வியத்தகு வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. ஆம், இந்தியாவின் ஒட்டுமொத்த இறப்பு விகிதம், 1951 இல் 1,000 பேருக்கு தோராயமாக 25.1 ஆக இருந்தது, தற்போது 1,000 பேருக்கு சுமார் 6.2 ஆகக் குறைந்துள்ளது.
- அதேபோல, குழந்தை மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைந்தும் உள்ளது. குறிப்பாக மருத்துவமனை பிரசவங்கள், தூய்மையான சுகாதாரம் மற்றும் அடிப்படை குழந்தை மருத்துவப் பராமரிப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகள், லட்சக்கணக்கான குழந்தைகள் ஐந்து வயதிற்கு முன்பே இறப்பதில் இருந்து காப்பாற்றியுள்ளன.
- தீவிர தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டதும் இறப்புகள் குறையவும், வாழ்நாள் நீடிக்கவும் முக்கிய காரணம். உதாரணமாக பெரியம்மை ஒழிப்பு மற்றும் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் (UIP) மூலம் போலியோ போன்ற பிற தொற்றுநோய்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதால், ஆரம்பகால குழந்தை இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் அரசின் சில திட்டங்களும் மக்களை காப்பாற்றியுள்ளன. அந்தவகையில் தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள், கிராமப்புற சுகாதார வசதிகளை விரிவுபடுத்தின. மேலும், எளிய குடும்பங்கள் மருத்துவச் செலவுகளால் பெரும் பொருளாதாரப் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாத்தன.

கருவுறுதல் விகிதம் (TFR) சரிவு:
சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப தசாப்தங்களில், கருத்தடை சாதனங்கள் கிடைக்காமை, அதிக குழந்தை இறப்பு மற்றும் ஆண் குழந்தை பெற்றெடுக்க ஆர்வம் காட்டுவது போன்ற காரணங்களால், இந்தியாவின் மொத்தக் கருவள வீதம் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 5.9 என்று இருந்தது.
காலப்போக்கில், தொடர்ச்சியான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள், பெண்கல்வி உயர்வு, நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் இந்த வீதம் படிப்படியாகக் குறைந்தது. மோடியின் ஆட்சிக் காலத்தில், இந்த எண்ணிக்கை 2.0 ஆக உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் பெண்கல்வி உயர்வு, பொருளாதார நெருக்கடிகள், மேம்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு வசதிகள் போன்ற பல காரணிகளின் விளைவாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்ந்து சரிந்தால் வரும் தசாப்தங்களில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவதற்கும், முதியவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். சுகாதாரம் மற்றும் கல்வியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இது பிரதிபலித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம், உழைப்பாளர் சக்தி மற்றும் சமூகக் கட்டமைப்பின் நீண்டகால எதிர்காலக் கணிப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கிறது என்பதால் அது சார்ந்த கவலை எழுந்துள்ளது.

