நானாட்டான் டிலாசால் கல்லூரியின் ஊடகக் கல்வி ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (08) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டனர்.
“குறித்த ஆசிரியர் இந்தப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்தே ஊடகக் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; இதனால் மாணவர்கள் ஊடகப் பாடத்தைக் கற்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், அந்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் அபிவிருத்திச் சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை எனவும், நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகக் குழப்பங்களை விளைவித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை முறைப்பாடு செய்தபோதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் அவரிடம் கோரிக்கை மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
மகஜரைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி துரித நடவடிக்கை எடுப்பதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சாதகமான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
எஸ்.ஆர்.லெம்பேட்












