Last Updated:
ஓமன் நாட்டில் இருக்கும் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிக்கிய இந்தியர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
ஈரானின் அணு ஆயுத கொள்கையை எதிர்த்து, கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டுத் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நிகழ்த்தியது. மேலும், உலகின் முக்கிய நீர்வழி பாதைகளில் ஒன்றாக இருக்கும் ஹர்முஸ் நீர்பாதையை ஈரான் மூடியது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி முதல் முறையாக இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தியது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலுக்கு மத்தியில் ஈராக், சிரியா போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாமென நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் தற்காப்புக்காக ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே “இன்றிரவுக்குள் டெஹ்ரான் அழிக்கப்படும்” என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் எக்ஸ் பதிவிட்டதால் சர்ச்சை வெடித்தது.
இப்படியான பரபரப்பு சூழல் நிலவிவரும் நிலையில், ஓமன் கடல் பகுதியில் moto tanker marivex எனும் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் கப்பலில் மொத்தம் 24 இந்தியர்கள் சிக்கி தவித்தனர்.
அமெரிக்காவின் தாக்குதலால் கப்பலுடன் சேர்ந்து உயிர் காக்கும் படகுகளும் எரிந்தது. இதனால், கப்பலில் சிக்கியவர்களால் அதில் இருந்து தப்பிக்க முடியாமல் வீடியோ பதிவு செய்து உதவி கேட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் ஓமன் தூதரகம் தொடர்புகொண்டு பேசியது. இதனைத் தொடர்ந்து கப்பலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுவருகின்றனர்.

