கொழும்பின் புறநகர் பகுதியான மீகொட பகுதியில் தானசாலையில் வரிசையில் நின்ற மக்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் ஹோமாகம நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
கடந்த மே 31ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R

