ரத்தினக்கல் திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு, தனது பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பலவந்தம் செய்தமை மற்றும் அச்சுறுத்தி எதனையோ பெற்றுக்கொள்ள முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், எஹெலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) இரத்தினபுரி விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகராகப் (CI) பணிபுரியும் இப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, எஹெலியகொட பகுதியிலேயே வைத்து இப்படிக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹெலியகொட பகுதியில் உள்ள ரத்தினக்கல் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற ரத்தினக்கல் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, அதன் உரிமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமே, இந்தச் சந்தேகநபர் (பொலிஸ் அதிகாரி) தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதப் பலவந்தம் செய்துள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

