மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர்ச்சியான பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளிலும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குவைத் ஏவுகணைத் தாக்குதல்
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இருதரப்புப் போர் முடிந்துவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறிய போதிலும், அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பரஸ்பரத் தாக்குதல்களை நடத்தி வரும் பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த புதன்கிழமை குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் டசின் கணக்கானோர் காயமடைந்ததுடன், ஒருவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் அதிகப்படியான பதற்றங்கள் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் மிகவும் சிக்கலானதாக இருப்பதோடு, அது எந்த நேரத்திலும் விரைவாக மாறக்கூடும் என்று இந்த எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண ஆலோசனை
இதனால், அங்குள்ள நிலவரங்கள் குறித்த முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பயண ஆலோசனைகளின்படி, பஹ்ரைன், இஸ்ரேல், மேற்குக் கரை, ஜோர்டான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கான பயண ஆலோசனைகள் ‘நிலை 3’ (Level 3 – பயணத்தை மறுபரிசீலனை செய்யவும்) என்ற மட்டத்தில் நீடிக்கின்றன.
இதேவேளை, ஈரான், ஈராக், லெபனான், சிரியா, காசா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் ‘நிலை 4’ (Level 4 – எக்காரணம் கொண்டும் பயணம் செய்ய வேண்டாம்) என்ற உச்சக்கட்ட எச்சரிக்கை மட்டத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

