தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழும் அஜித்குமார், ஒரு சர்வதேசக் கார் பந்தய வீரராகவும் தனது திறமையை உலகளவில் நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) திரைப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு கார் பந்தயங்களில் தீவிரக் கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing) என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி வழிநடத்தி வருகிறார்.
இவரது அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமாரின் அணி தொடர்ந்து களம் கண்டு வருகிறது.
சமீபத்தில் (மே 30) அஜித்குமாரின் தாயார் காலமானார். அவரது மறைவிற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திரை உலகைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நேரில் சென்றும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.
தாயாரை இழந்த பேரிழப்புக்கு ஆளாகியிருந்த நிலையிலும், அந்தத் துயரம் நிகழ்ந்த நான்கே நாட்களில் அஜித் மீண்டும் கார் ரேசிங் பணிகளுக்குத் திரும்பியுள்ளார். அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் அவரது குழு நேரடியாகப் பங்கேற்கிறது.
இது குறித்து அஜித்குமார் ரேசிங் பக்கத்தில், “கனத்த இதயத்துடன் மீண்டும் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன்; வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும் (Life must go on)” என்று பதிவிடப்பட்டுள்ளது. தாயின் மறைவிலும் தொழில்பக்தியுடன் மீண்டு வந்துள்ள அஜித்தின் இந்த முடிவு, அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


