மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. குறிப்பாக, அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் தோல்வி அக்கட்சிக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. அக்கட்சிக்கு 80 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சோபன்தேப் சட்டோபாதேவை எதிர்க்கட்சித் தலைவராக மம்தா நியமித்தார். இதுதொடர்பாக கடந்த மாதம் 6 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அக்கட்சி தெரிவித்தது. இதனை எதிர்த்த அக்கட்சி எம்எல்ஏக்களான ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சண்டிபன் சஹா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி டிஎம்சி உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு திரிணாமுல் காங்கிரஸின் 60 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி சபாநாயகரை சந்தித்த ரிதப்ரதா, தன்னை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க கோரிக்கை வைத்தார். அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நிலையில், மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார் ரிதப்ரதா பானர்ஜி. கொல்கத்தாவில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த ரிதப்ரதா, 1990-களில் கல்லூரி மாணவராக இருந்தபோதே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக 8 ஆண்டுகள் இருந்த ரிதப்ரதா, மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் முகமாக உருவானார். அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நெருக்கமானவராக இருந்த ரிதப்ரதா, 2011-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கொல்கத்தாவின் தக்ஷின் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
இருப்பினும், அவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு அவருக்கு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியது சிபிஎம். அப்போது அவருக்கு வயது 34. அதன் பிறகு மூன்றே ஆண்டுகளில் கட்சியில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. தாம் இருந்த கட்சியின் கொள்கைக்கு முரணாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமல்லாமல் கட்சியின் தலைவர்களை எதிர்த்தும் அவர் பேசி வந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதே ஆண்டில் அவர் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும், சில சர்ச்சை வீடியோக்கள் வெளியானதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 2018-ஆம் ஆண்டு அவர் டிஎம்சியில் இணைந்ததும், மம்தா பானர்ஜிதான் உண்மையான இடதுசாரி தலைவர் என்று புகழ்ந்தார். மம்தாவின் நம்பிக்கைக்குரிய நபராக வளர்ந்த ரிதப்ரதா, அக்கட்சியின் தொழிலாளர் பிரிவு தலைவராக்கப்பட்டார்.
2024-இல் டிஎம்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் உலுபெரியா புர்பா தொகுதியில் வெற்றிப்பெற்ற ரிதப்ரதா முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். வெற்றிப் பெற்றது முதல் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார். குறிப்பாக மம்தாவின் அரசியல் வாரிசாக பார்க்கப்படும் அபிஷேக் பானர்ஜிக்கும், ரிதப்ரதா-வுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.
இந்நிலையில், கட்சி எம்எல்ஏ-க்களை வைத்து தீர்மானம் நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்பட்டதாக கட்சி தலைமை மீது ரிதப்ரதாவும், மற்றொரு எம்எல்ஏ சண்டிபன் சஹாவும் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை நடந்துவருகிறது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 60 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ரிதப்ரதா எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் எப்படி எதிர்க்கட்சி தலைவராக முடியும் என மம்தாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், மகாராஷ்டிராவில் சிவசேனாவின் நிலையை நினைவூட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸின் ஏக்நாத் ஷிண்டேவாக ரிதப்ரதா உருவெடுப்பாரா அல்லது, மீண்டும் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக மம்தா கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

