பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு
பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் காவல்துறை விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய
பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள
திருவுருவச்சிலையில் வழமைபோன்று எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8
மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக
உத்தியோகபூர்வமாக உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு
செய்யப்பட்டு வருகின்றன.
இந் நினைவேந்தலை ஏற்பாடு செய்துவரும் நிலையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச
சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு அழைப்பு
பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைய பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை
வளாகத்தில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உணர்வாளர்கள்,
உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு
செய்துவரும் நிலையில் புலனாய்வாளர்கள் ஏற்கனவே புகைப்படம் மற்றும் காணொளி
எடுப்பதில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தமக்குக் கிடைக்கப்பெற்ற
முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
நினைவேந்தல்களுக்கு தடையில்லை என அரசாங்கம் சொல்லளவில் தெரிவித்து
வருகின்றபோதும் செயலளவில் நினைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்காத போக்கே
காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

