Last Updated:
85 வயது முதியவருக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 85 வயது முதியவருக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராகோபூர் கிராமத்தில் நகேஷ்வர் ராய், ஜெகதீஷ், நாக்தேவ் உள்ளிட்ட சிலர் ஊர் பொதுப்பாதையில் கண்ணாடிச் சில்லுகளை புதைத்து அப்பாதையை யாரும் பயன்படுத்தாத முடியாதபடி தடுக்க முயன்றனர். அதை ஊர்க்காரர்கள் தட்டி கேட்டு அனைவரையும் எச்சரித்து அனுப்பினர். அங்கிருந்து புறப்பட்ட கும்பல் மீண்டும் துப்பாக்கியுடன் ஊருக்குள் நுழைந்து தங்களை எச்சரித்த நபர்களைக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அதில் ஷம்பு ராய், உதேஷ், அதாலத் மற்றும் ராம் சகி தேவி ஆகிய நான்கு பேர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக 1992-ல் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அப்போது 51 வயதாக இருந்த தீப் ராய், நகேஷ்வர், ஜெகதீஷ், நாக்தேவ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது கிட்டத்தட்ட 34 வருடங்களாக நீடித்த இவ்வழக்கில் 10 சாட்சிகளின் வாக்குமூலங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
அதில் கைதானவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு இறுதியாக 34 வருடங்களுக்குப் பின் பிகாரின் வைஷாலி மாவட்ட நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இருவர் உயிரிழக்க, மீதமுள்ள நகேஷ்வர், ஜெகதீஷ், நரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான 85 வயது தீப் ராய்க்கு வயது மூப்பின் காரணமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மோசமான உடல்நிலையால் தற்போது அவருக்குத் தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, நீதிபதி அவகாசம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் பிகார் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


