ஒரு சில சாரதிகளின் அலட்சியமான மற்றும் அசமந்த போக்கு காரணமாக நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்தவண்ணமேயுள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (02) அன்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில், முன்பள்ளிச் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகர்ப் பகுதியிலிருந்து சென்ற காருடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பலமாக மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.
தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் முன்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார். கார் சாரதியின் அதீத அசமந்தப் போக்கே இவ்விபத்து ஏற்படுவதற்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தின் போது தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான தாயும் மகளும், அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வ.சக்தி


