அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் இளைய மகளான டிப்னி டிரம்ப், தனது கணவருடன் உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமான தாஜ்மகாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்பின் இரண்டாவது மனைவியின் மகளான டிப்னி டிரம்ப், தனது கணவர் மைக்கேல் பவுலோஸ் உடன் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கமைய டெல்லி வந்தடைந்த அவர், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவிற்குப் பயணம் மேற்கொண்டார்.
ஆக்ராவிற்குச் சென்ற டிப்னி டிரம்ப் மற்றும் அவரது கணவர், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த முகலாயக் கட்டிடக் கலை மற்றும் பளிங்குக் கற்களின் அழகைக் கண்டு அவர்கள் வியந்து பாராட்டினர். மேலும், தாஜ்மகால் வளாகத்தின் முக்கியப் பகுதிகளில் நின்று, தங்களின் நினைவாகப் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.
முன்னணி விஐபிக்களின் (VIP) வருகையை முன்னிட்டு, தாஜ்மகால் வளாகம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. தாஜ்மகாலைத் தொடர்ந்து, அவர்கள் தங்களின் அடுத்தகட்ட பயணமாக விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்குச் செல்லவுள்ளனர்.

