Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் இல்லத்தில் மியான்மர் ராணுவக் குழுவின் தலைவரும் அதிபருமான மின் ஆங் ஹ்லைங்கை சந்தித்துப் பேசி உள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான உறவுகளை மறுவடிவமைக்க தேவை அதிகம் எழுந்துள்ளது. இதுபோன்றதொரு நிலையில் மியான்மர் ராணுவக் குழுவின் தலைவரும் அதிபருமான மின் ஆங் ஹ்லைங், ஐந்து நாள் இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மியான்மரின் அதிபராகப் பதவியேற்ற பிறகு, மின் ஆங் ஹ்லாயிங்கின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான். எனவே இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. இந்நிலையில்தான் இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து அவர் பேசி உள்ளார்.
மியான்மர், பல ஆண்டுகால ராஜதந்திரத் தனிமைப்படுத்தலில் இருந்து வெளிவர முயன்று வருகிறது. மறுபுறம் மியான்மர் நாட்டில் உள்ள முக்கியமான அரிய மண் தாதுக்களின் இருப்பைப் பெறுவதற்கும், அங்கு சீனாவின் அளவுகடந்த ஆதிக்கத்தைக் குறைத்து தனது செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும் இந்தியா விரும்புகிறது. இதுபோன்ற சூழலில்தான் பிரதமருடனான மியான்மர் அதிபரின் சந்திப்பு அமைந்துள்ளது.
மியான்மர் அதிபருடன் பிரதமர் மோடி
முன்னதாக நேற்று (மே 31), மியான்மர் அதிபர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையில் எல்லைக் கிளர்ச்சி, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் உள்ளிட்ட இந்திய – மியான்மர் எல்லையில் உள்ள முக்கிய பாதுகாப்பு சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் நேற்று முன்தினம் (மே 30) அன்று மியான்மர் அதிபரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் மியான்மர் அதிபரின் நேர்மறையான அணுகுமுறையைப் பாராட்டினார். வெளியாகி உள்ள தகவல்களின்படி, இந்த ஈடுபாடானது அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மையை நோக்கிய இந்தியாவின் பிணைப்பை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.
இவற்றுடன் இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ (A Neighborhood First) மற்றும் ‘ஆக்ட் ஈஸ்ட்’ (Act East) கொள்கைகளின்படி மியான்மர் உடனான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார இணைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மியான்மர் அதிபர் பீகாரின் புத்தகயா சென்று மகாபோதி ஆலயத்தில் வழிபாடு நடத்தியது, இரு நாடுகளின் வரலாற்று மற்றும் பௌத்த ஆன்மீகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தியது.


