
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே, வரும் ஜூன் 6 ஆம் திகதி இந்தியா திரும்பவுள்ளதாகத் திங்கள்கிழமை (01 ) ஆம் திகதியன்று தெரிவித்துள்ளார். தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, புதுடெல்லியில் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவொன்றில், ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலையில் தான் புதுடெல்லி விமான நிலையம் வந்தடையவுள்ளதாகவும், அங்குத் தன்னுடன் ஆதரவாளர்களும் மாணவர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் திப்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளதாவது:
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழியைப் பின்பற்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோரி அமைதியான முறையில் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால், அவர்கள் கண்டிப்பாகச் செவிசாய்த்தே ஆக வேண்டும். நான் ஜூன் 6 சனிக்கிழமை காலை புதுடெல்லி வந்தடைவேன். தயவுசெய்து என்னுடன் விமான நிலையத்தில் இணைந்துகொள்ளுங்கள்; நாம் அனைவரும் ஒன்றாக நாடாளுமன்ற வீதி (Parliament Street) காவல் நிலையத்திற்குச் சென்று, ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியைக் கோருவோம்.”
காக்ரோச் ஜனதா கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், பல பொது விவாதங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மூத்த வழக்கறிஞர்களுக்கான அந்தஸ்து குறித்த நீதிமன்ற விசாரணையின் போது, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் ‘கரப்பான் பூச்சிகள்’ (Cockroaches) மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ (Parasites) எனக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட கருத்துகளின் பின்னணியிலேயே இந்தக் கட்சி உருவானது.
இருப்பினும், ‘போலியான பட்டப்படிப்புகள்’ மூலம் சட்டத் தொழிலுக்குள் நுழைபவர்களைக் குறித்தே தான் அவ்வாறு குறிப்பிட்டதாகவும், தனது கருத்துகள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி பின்னர் விளக்கமளித்திருந்தார்.
இதற்கிடையில், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகக் காக்ரோச் ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கம் முடக்கப்பட்டது. அதன் பின்னர், அது ‘காக்ரோச் இஸ் பேக்’ (Cockroach is Back) என்ற பெயரில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, அதன் நிறுவனருக்கு உடனடி நிவாரணம் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்வு தொடர்பான தொடர் சர்ச்சைகளும் குளறுபடிகளும் மாணவர்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள திப்கே, இதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

