அரசாங்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என்றும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பிறரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்றும் மேடைகளில் சத்தமிடுபவர்கள், உண்மையில் தோல்வி பயத்தினால் மட்டுமே அவ்வாறு பேசுகிறார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று கண்டி மாரஸ்ஸன விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய தீர்ப்புகளுக்கு எப்போதும் மதிப்பளித்து, தலைவணங்கிப் பழகிய அரசியல் பாரம்பரியமே தங்களுடையது என்று சுட்டிக்காட்டிய அவர், மக்களுடன் இணைந்தே தாங்கள் அரசியல் செய்வதாகவும் கூறினார். மக்கள் தங்களுக்கு வாக்களித்து அதிகாரத்தைத் தரும்போது அவர்களின் தேவைகளை நியாயமான முறையில் நிறைவேற்றுவதாகவும், அதேபோன்று மக்கள் தங்களை நிராகரிக்கும் பட்சத்தில், அதனை முதிர்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, எமது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து சாதாரணமாகத் தொடங்குவதுதான் தங்களின் வழமையாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதும் அடிமட்ட அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய தினமும் குருணாகல் பகுதியில் கட்சியின் முக்கிய கூட்டங்கள் மற்றும் கிராம மட்டச் சந்திப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் விருப்பங்கள் என்ன என்பதை தாங்கள் நன்கறிந்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் அவர்களின் தவறான நிர்வாகக் கொள்கைகளை எவ்வித பயமுமின்றி தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார். (a)

