Last Updated:
போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் ஆளுக்கொரு மூலையில் தெறித்து ஓட அதில் கஜேந்திரா என்ற ஒருவரை மட்டும் துப்பாக்கி முனையில் பிடித்தனர்.
ஒடிசாவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் கல்லாக்கட்டி வந்த சூதாட்ட கும்பல் தலைவன், கட்டு கட்டான பணத்துடன் போலீசாரிடம் சிக்கினார்.
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஜோகேட்டா அசன்பேடா கிராமத்தில் சட்ட விரோதமாக ஐபிஎல் சூதாட்டம் நடத்தப்படுவதாக ஹதிபாரி காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அதிரடி வேட்டையில் இறங்கிய போலீசார், ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள குடோனை சுற்றி வளைத்து உள்ளே நுழைந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் ஆளுக்கொரு மூலையில் தெறித்து ஓட அதில் கஜேந்திரா என்ற ஒருவரை மட்டும் துப்பாக்கி முனையில் பிடித்தனர்.
முக்கிய குற்றவாளியான இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து ஒடிசா அரசாங்கம் ஷாக் ஆகியுள்ளது. வை ராஜா வை திரைப்படத்தைப் போலவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீது பணம் கட்டி மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு ஓவருக்கு எத்தனை ரன், எத்தனை விக்கெட் என்பதை மையப்படுத்தி.. ஆயிரத்தில் ஆரம்பித்துப் பல லட்ச ரூபாய் வரை பலரும் சூதாட்டம் ஆடியுள்ளனர்.
இதனை அடுத்து கைதான கஜேந்திரா மீது வழக்குப்பதிந்த போலீசார்… சூதாட்ட குடோனில் இருந்த வங்கி பாஸ்புக், பல சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். வழக்கின் முக்கிய துப்பாக 2 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நிகழ்ந்த பைஜ்ந்தி சாஹூ என்ற பெண்ணின் வங்கிக் கணக்கும் சிக்கி உள்ளது.
இதனை அடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு தப்பியோடிய கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் பல முக்கிய தலைகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின் முடிவில் எத்தனை சூதாட்டம் ஆடியுள்ளார்கள்… எவ்வளவு கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறித்து தெரியவரும். ஒடிசாவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் கல்லாக்கட்டி வந்த சூதாட்ட கும்பல் தலைவன், கட்டு கட்டான பணத்துடன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பட பாணியில் ஐபிஎல் பெட்டிங்.. போலீசில் சிக்காமல் தப்பிய கும்பல்.. முக்கிய குற்றவாளி அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!


