Last Updated:
தனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டதாகவும் நினைத்த சுமித், அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என துடித்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் இளம் பெண்ணின் புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட நபர் போலீசாரிடம் வசமாக சிக்கியிருக்கிறார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமித் சர்மா என்பவருடன் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட சுமித், கடவுள், கோவில், ஆன்மா, தியானம் என மங்களகரமாக அடிக்கடி சாட்டிங் செய்ய ஆரம்பித்தார். தான் ஒரு உயர்ந்த மனிதரிடம் பழகிக் கொண்டிருக்கிறோம் என நினைத்து புளகாங்கிதம் அடைந்த பெண்ணின் எண்ணத்தில் இடி விழுந்தது போல் சுமித்தின் அடுத்தடுத்த சாட்டிங் இருந்தது.
தன்னை ஒரு சாமியார் என்று காட்டிக் கொண்ட சுமித், தன் காதல் எண்ணங்களை மறைமுகமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார். நாளடைவில் அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழக விரும்புவதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே சுமித்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். சமூக வலைதளங்கள் அனைத்திலும் சுமித்தை பிளாக் செய்த பெண், அவரிடமிருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டார். இதைப் பார்த்த சுமித்துக்கு ஆத்திரம் தலைக்கேறியிருக்கிறது. தன்னை அந்த பெண் அவமானப்படுத்தி விட்டதாகவும், தனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டதாகவும் நினைத்த சுமித், அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என துடித்திருக்கிறார்.
உடனே ஆன்லைனில் பேக் ஐ.டி. உருவாக்கி அதன் மூலம் அந்த பெண்ணுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அதையும் தாண்டி ஒருபடி மேலே போய் அந்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் அவரது தாயின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து எடுத்து அதை AI தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார். இதற்காக இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் அப்பெண்ணின் பெயரில் 10 போலி கணக்குகளைத் திறந்து, அவற்றில் அப்பெண்ணின் சித்திரிக்கப்பட்ட ஆபாச படங்களை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து தெரியவந்தவுடன் அப்பெண் துடிதுடித்துப் போனார். அவரது குடும்பத்தினர் மனம் உடைந்து போயினர். நடந்த சம்பவம் குறித்து அகமதாபாத்தில் உள்ள சைபர் பிரிவு போலீஸில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். வழக்கு பதிந்தபோலீசார் சுமித் சர்மாவை வலைவீசி தேடி வந்தனர். அவர் டெல்லியில் இருந்தபடி அடுத்த பெண்ணுக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தட்டித் தூக்கியுள்ளனர்.
ஆன்மீகத்தின் பின்னால் மறைந்து கொண்டு அடிமட்ட ரேஞ்சுக்கு பெண்களிடம் அட்டூழியம் செய்து கொண்டிருந்த நபர் சிக்கியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் உலவும் பெண்கள் விழிப்புடம் இருக்க வேண்டும் என போலீசாரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச சித்தரிப்பு.. பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்.. என்ன நடந்தது?


