நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள
நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற
வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய
தினம் ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
பாரிய அளவில் போராட்டம்
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை
சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த
இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக
காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக
காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில்
காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை
முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம்
வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.
இந்நிலையில் வெசாக் கால பகுதியில் அப்பகுதி முழுவதும் கறுப்பு கொடிகள் பறக்க
விடப்பட்டு பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

