சர்வதேச வேளாண் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பொருளாதாரத் தரவரிசையில் இரண்டாவது இடம் வகித்தும் வரும் இந்தியா உரத் தேவையில் பெரும் பங்கை இறக்குமதியை நம்பியே உள்ளது.
இதில் முக்கிய உரங்களான யூரியா, டிஏபி உள்ளிட்டவற்றை சீனாவிடம் இருந்தும், பொட்டாஷ் மற்றும் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியா இறக்குமதி செய்கிறது.
சவுதி அரேபியாவிடம் இருந்து யூரியா மற்றும் அமோனியம், மொராக்கோ, ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து பாஸ்பேட் பாறை, மற்றும் பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட்ட உரங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இது தவிர கனடாவில் இருந்து குறிப்பிட்ட அளவு பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதலால் மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் உர இறக்குமதியை கடுமையாக பாதித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கத்தில் அதிகரித்த போர் நெருக்கடி, மற்றும் கப்பல்களுக்கான காப்பீட்டு கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்து உர இறக்குமதி தடைபட்டுள்ளது.
அதேநேரம், போர்ச் சூழலை கருத்தில் கொண்டும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் சீனா, யூரியா, நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பேட் உள்ளிட்ட உர ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்ததால் அந்த உரங்கள் இந்தியா வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், உக்ரைன் போரை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, தற்போதைய ஈரான் – அமெரிக்கா மோதல்களால் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டை சீர் செய்யும் பொருட்டு, அமோனியம் நைட்ரேட், யூரியா போன்ற நைட்ரஜன் சார்ந்த உரங்களை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
இப்படி பல்வேறு காரணங்களால் இந்தியா வரவேண்டிய உரங்கள் தடைபட்டுள்ளதால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை உயர்வைக் பொருத்தவரை, ஒரு மூட்டை ஆயிரத்து 975 ரூபாய்க்கு விற்பனையான மூரியேட் ஆஃப் பொட்டாஷ், தற்போது 2 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்ற பொட்டாஷ் தற்போது 2 ஆயிரத்து 250 ரூபாயாகவும்,ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் உரம் ஆயிரத்து 550 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை அமோனியம் சல்பேட் ஆயிரத்து 400க்கும், NPK திட்ட உரம் ஆயிரத்து 750இல் இருந்து 2 ஆயிரத்து 150 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
அதேபோல், NPK முதல் ரகம் 2 ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 450 ரூபாயாகவும், NPK இரண்டாவது ரகம் ஆயிரத்து 900 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
அதேநேரம் யூரியா மற்றும் டிஏபி உரங்கள் பெரிய மாற்றமின்றி முறையே மூட்டைக்கு 266 ரூபாயும், ஆயிரத்து 350 ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உரங்களின் விலை உயர்வால் விவசாயச் செலவுகள் அதிகரித்து, கடும் பாதிப்பை சந்தித்திருப்பதாக சிறு, குறு விவசாயிகள் கூறுகின்றனர்.

