தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர மத்தியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது: தலவாக்கலை நகரத்தின் பிரதான வீதியிலுள்ள பாதசாரி கடவையை (Man Crossing) குறித்த யுவதி கடக்க முயன்ற போதே, வேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த யுவதி, தங்கக்கலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், அவர் தலவாக்கலையிலுள்ள வெதுப்பகம் (Bakery) ஒன்றில் பணிபுரிந்து வருபவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.விபத்து இடம்பெற்றதும் படுகாயமடைந்த யுவதி உடனடியாக மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியின் சாரதியைக் கைது செய்துள்ள தலவாக்கலை பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
