Last Updated:
பவர்பிளேயில் அவரை கட்டுப்படுத்த வகுக்கப்பட்ட உத்திகளை அவர் மிக சாதுரியமாக முறியடித்து ரன்களைக் குவித்ததாகவும் பிராங்க்ளின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடந்த விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய ருத்ரதாண்டவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இப்போட்டியில் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அவரது இந்த அசாத்திய பேட்டிங் திறமையைக் கண்டு, எதிரணியான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
போட்டி நிறைவடைந்ததும் மைதானத்தில் வைத்து காவ்யா மாறன், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவரிடம் கை கொடுத்து, அவரது சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டி ஊக்கமளித்தார். பொதுவாகத் தனது அணி தோற்கும்போது மிகுந்த ஏமாற்றமடையும் காவ்யா மாறன், இம்முறை எதிரணியின் 15 வயது இளம் வீரரின் அசாத்திய திறமையைப் பாராட்டிய செயல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹைதராபாத் அணியின் உதவி பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின், சூர்யவன்ஷியின் அசுரத்தனமான பேட்டிங் திறமையைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். “இப்படி ஒரு அசாத்திய திறமையை இதற்கு முன்பு யாரும் பார்த்திருக்க முடியாது. தற்போதைய நிலையில் அவர் செய்வதெல்லாம் வியப்பிற்குரியது.
இன்னும் 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு முன்னால் இருக்கிறது என்று நினைக்கும்போதே மற்ற அணிகளுக்கு அது பயத்தை ஏற்படுத்துகிறது. அவர் இன்னும் மெருகேறுவார், இன்னும் வலிமையடைவார்” என்று பிராங்க்ளின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், சூர்யவன்ஷிக்கு பந்துவீசுவதற்கான லைன் மற்றும் லென்த் மிகவும் குறைவாகவே இருந்ததாகவும், பவர்பிளேயில் அவரை கட்டுப்படுத்த வகுக்கப்பட்ட உத்திகளை அவர் மிக சாதுரியமாக முறியடித்து ரன்களைக் குவித்ததாகவும் பிராங்க்ளின் தெரிவித்துள்ளார்.


