ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) துறைமுக நகரம், சிரிக் (Sirik) மற்றும் ஜாஸ்க் (Jask) கடலோரப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் CENTCOM தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் (Captain Tim Hawkins) இந்தத் தாக்குதல்களை “தற்காப்பு நடவடிக்கைகள்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கப் படைகளை அச்சுறுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள், சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் நீரிணையில் Sea Mines வைக்க முயன்ற ஈரானிய ராணுவப் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டிம் ஹாக்கின்ஸ் (Tim Hawkins) தெரிவித்துள்ளார். இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படக் கூடாது என்பதால் “கட்டுப்பாட்டுடன்” மிகக் குறைந்த அளவிலேயே தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக CENTCOM குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு புதிய நிபந்தனையை விதித்திருந்தார். ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் அனைத்தையும் உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையில் அதை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் எக்காரணம் கொண்டும் அமெரிக்காவிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ ஒப்படைக்கப்படக் கூடாது என்று உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். ஈரானின் Supreme National Security Council நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அணுசக்தி விவகாரத்தில் எங்களின் கொள்கையில் எந்தவொரு பின்வாங்கலும் இருக்கப்போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
மொஜ்தபா கமேனி
தற்போது கத்தாரில் பேசப்பட்டு வரும் தற்காலிக உடன்படிக்கை வரைவு என்பது 60 நாட்கள் போர்நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் பாதையை திறப்பது பற்றியது மட்டுமே என்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இசுமாயில் பகாய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார். அணுசக்தி விவகாரம் பற்றி அடுத்த 60 நாட்களுக்குள் தனியாகப் பேசலாமே தவிர, அதற்கு முன்பாக யுரேனியத்தை ஒப்படைக்க முடியாது.” என்றும் பகாய் (Baghaei) கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலுக்கு, ஈரானிய ராணுவம் மிக ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு, ஹார்முஸ் நீரிணையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையின் ‘யுஎஸ்எஸ் பிலிப்பைன் சீ’ (USS Philippine Sea) என்ற அதிநவீன Destroyer போர்க்கப்பலை இலக்கு வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவியது. இதற்கு ஈரானின் புகழ்பெற்ற ‘கதீர்’ (Ghadir) மற்றும் ‘நூர்’ (Noor) ரக கப்பல் எதிர்ப்பு அதிவேக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் (Aegis Defense System) பெரும்பாலான ஈரானிய ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்திய போதிலும், ஒரு ஏவுகணை போர்க்கப்பலின் பின்புறப் பகுதியில் பலமாகத் தாக்கியதில் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கிய ராணுவத் தளமான US Fifth Fleet Base-சை இலக்கு வைத்து ஈரான் தனது ‘ஷாஹெத்-136’ (Shahed-136) தற்கொலை டிரோன்களை ஏவியது. பந்தர் அப்பாஸ் தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த டிரோன்கள் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாண்டி அமெரிக்கத் தளத்தின் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளைத் தாக்கின. இத்தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இரண்டு அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் அத்துமீறல்களுக்குப் பாடம் புகட்டவே இந்தத் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
(கோப்புப்படம்)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தாக்குதலுக்கு மத்தியிலும் இன்னும் சில நாட்களில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அமைதி ஒப்பந்தம் உருவானால் அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்குக் கிடைக்கும் லாபங்கள் மற்றும் இழப்புகள் என்ன?
பல ஆண்டுகளாக அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளால் தவித்து வரும் ஈரானுக்கு, தற்போதைய சூழலில் இருந்து மீள கணிசமான முதலீடு தேவைப்படுகிறது. அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள தங்களின் சொத்துக்களை பகுதி அளவாவது உடனடியாக அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என்று ஈரான் பிடிவாதமாக நிபந்தனை விதித்துள்ளது. உள்நாட்டில் ஆட்சியைத் தக்கவைக்கவும், போரினால் சிதைந்த நாட்டை மறுசீரமைப்பு செய்யவும் ஈரானுக்கு இந்த ஒப்பந்தம் அவசியமாகிறது. அமெரிக்கா சொத்துக்களை விடுவிக்க மறுத்தால், சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான Strait of Hormuz மீதான தனது முடக்கத்தை நீட்டிக்கவும், அதன் மூலம் வருவாய் ஈட்டவுமே ஈரான் முயற்சிக்கும். அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அரசியல் ரீதியாகத் தன்னை ஒரு ‘வெற்றியாளராகக்’ காட்டிக்கொள்ள விரும்புகிறார். மேலும், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலை மனதில் வைத்தே அவர் காய்களை நகர்த்துகிறார்.
இந்த மத்திய கிழக்கு போரால் உலகளவிலும், அமெரிக்காவிலும் கடுமையாக உயர்ந்துள்ள எரிபொருள் விலைகளைக் குறைப்பதே டிரம்பின் உடனடி இலக்காகும். ஹார்முஸ் திறக்கப்பட்டால் மட்டுமே உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறையும். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா விரும்பினாலும், தற்போதைய முக்கிய பிரச்சினைகளான தற்காலிகப் போர்நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் முடக்கத்தை முதலில் சரிசெய்யவே டிரம்ப் முன்னுரிமை அளிக்கிறார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரானுடன் ஏற்படும் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் அந்நாட்டின் அணுசக்தி அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதாக இருக்க வேண்டும்” என்பதில் உறுதியாக உள்ளார். 2015-ல் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை இஸ்ரேல் எப்படி எதிர்த்ததோ, அதேபோல் தற்போதைய ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் முழுமையாக எதிர்க்கிறது.
ஈரான் – இஸ்ரேல்
அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா விவகாரங்களையும் சேர்க்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது. ஆனால், அமெரிக்கா உத்தரவாதம் அளித்தாலும் லெபனான் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தவில்லை. இந்த லெபனான் விவகாரமே, அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் உடைக்கக்கூடிய ஒரு ஆயுதமாக இஸ்ரேலுக்குப் பயன்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஈரானுக்கு இந்த ஒப்பந்தம் வாழ்வா சாவா பிரச்சினையாகும்; ஆனால் அமெரிக்காவுக்கு இது எண்ணெய் விலை மற்றும் தேர்தல் வெற்றி தொடர்பான குறுகிய கால இலக்காகும். இஸ்ரேலோ, ஈரானை ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக முழுமையாக ஒடுக்குவதே மத்திய கிழக்கிற்கு ஒரே வழி என்று நம்புகிறது.
டிரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் ஆட்சியை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை; மாறாக, அவர்களைக் கட்டுக்குள் வைத்து (Containment), சர்வதேச வர்த்தகப் பாதையைச் சீரமைத்து, தங்களின் உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பதே முதன்மை இலக்கு. இஸ்ரேலுக்கு இது பொருளாதாரப் பிரச்சினை அல்ல, பாதுகாப்புப் பிரச்சினை. ஈரானின் அணுசக்தித் திறன் மற்றும் அதன் ‘மினியன்’ அமைப்புகள் (Axis of Resistance) முற்றிலும் வேரறுக்கப்படாத வரை மத்திய கிழக்கில் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என நெதன்யாகு கருதுகிறார். இதனால் அமெரிக்காவின் சமரசப் போக்கை இஸ்ரேல் தன் முதுகில் குத்தும் செயலாகப் பார்க்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருந்தாலும், ஈரான் தனது கச்சா எண்ணெயை ரகசியமாகச் சீனாவிற்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், அமெரிக்கா விதிக்கும் தடைகளால் தங்களுக்கு உடனடி முடக்கம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்ற தைரியம் ஈரானுக்கு உள்ளது. எனவேதான், அமெரிக்கா தங்களின் முடக்கப்பட்ட சொத்துக்களை ரிலீஸ் செய்தால் மட்டுமே முழுமையான அமைதிக்குக் கட்டுப்படுவோம் என்று ஈரான் சர்வதேச அரங்கில் பேரம் பேசுகிறது.
ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்தியது. இதற்கு பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
கத்தார் அமைதி ஒப்பந்தம் என்பது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மட்டுமே நடப்பது. ஆனால், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதிகள் போன்ற அமைப்புகளின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை ஈரான் உடனடியாகக் கைவிடாது. அமெரிக்கா ஈரானுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டாலும், இஸ்ரேல் தன்னிச்சையாக லெபனான் மீதோ அல்லது சிரியா மீதோ தாக்குதல் நடத்தினால், ஈரான் மீண்டும் போருக்குள் குதிக்க வேண்டியிருக்கும். இந்த ஒரு புள்ளியே ஒட்டுமொத்த கத்தார் பேச்சுவார்த்தையையும் எந்த நேரத்திலும் உடைக்கக்கூடிய Poison Pill ஆக உருவெடுத்துள்ளது.
இதனிடையே, ஈரான் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானும் ஆபிரகாம் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்ற அதிபர் டிரம்பின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ‘ஆபிரகாம் ஒப்பந்தங்களில்’ (Abraham Accords) பாகிஸ்தானும் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் இஸ்ரேலை ஒரு தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாகும். அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நேற்று முற்றிலும் நிராகரித்துவிட்டது. “அமெரிக்காவின் இந்த அழுத்தம் எங்களுக்கு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதற்கும், ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணைய மறுப்பதற்கும் இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்கிறது.
சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு பாலஸ்தீன நாடு (Independent Palestinian State) 1967-ம் ஆண்டு எல்லைகளின்படி அமைக்கப்பட்டு, அதன் தலைநகராக ‘கிழக்கு ஜெருசலேம்’ அறிவிக்கப்படும் வரை இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் ஒருபோதும் அங்கீகரிக்காது என்பதில் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இஸ்ரேலுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேலை அங்கீகரித்தால், அது உள்நாட்டில் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை அமெரிக்கா பல்வேறு நிபந்தனைகளின் பேரிலேயே வழங்கி வருகிறது. தற்போது டிரம்பின் கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படலாம். ஈரான் விவகாரத்துடனான தொடர்புகத்தாரில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் இஸ்ரேலுக்கான ஆதரவை அதிகரிக்க டிரம்ப் முயற்சிக்கிறார். ஆனால் பாகிஸ்தான் தற்போது கொடுத்துள்ள இந்த நெருக்கடி டிரம்பின் மத்திய கிழக்கு திட்டத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நிதி உதவிகள் மற்றும் ஐஎம்எஃப் (IMF) கடன்கள் மிக அவசியமாக இருந்தாலும், பாலஸ்தீன விவகாரத்தில் தங்கள் நாட்டின் நீண்டகாலக் கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. டொனால்ட் டிரம்பின் ‘ஆபிரகாம் ஒப்பந்த’ விரிவாக்க முயற்சிக்கு பாகிஸ்தான் அளித்துள்ள இந்த பதிலடி அமெரிக்க நிர்வாகத்திற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

