Last Updated:
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக விளங்கிய பைஜூஸ் நிறுவனம், ஒரு கட்டத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சபட்ச சந்தை மதிப்பை எட்டியது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக விளங்கிய பைஜூஸ் நிறுவனம், ஒரு கட்டத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சபட்ச சந்தை மதிப்பை எட்டியது. கொரோனா பேரிடர் முடிந்த பிறகு ஆன்லைன் வகுப்புகளின் தேவை குறைந்ததால் அந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி வெகுவாக சரிந்தது. இதனால் லாபத்தை விட செலவுகள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து ஒரு கட்டத்தில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், கத்தார் முதலீட்டு வாரியத்தின் துணை நிறுவனமான ‘கத்தார் ஹோல்டிங்ஸ்’ தொடர்ந்த வழக்கு ஒன்றில், ஏப்ரல் 2024 முதல் பைஜூ ரவீந்திரனின் சொத்து விவரங்களை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டது. அந்த உத்தரவுகளை தொடர்ந்து மீறியதாக, அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு செலவாக சுமார் 90,000 சிங்கப்பூர் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 67 லட்சம் ரூபாய் செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரவீந்திரன் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு நாட்டில் இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், உடனடியாக அதிகாரிகளிடம் சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1 புள்ளி 2 பில்லியன் டாலர் கடன் தொடர்பான வழக்குகள், அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. பைஜூஸ் நிறுவனருக்கு 6 மாத சிறை தண்டனை.. சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு!

