Last Updated:
துருக்கியில் பொது மக்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்தும் தடியடி நடத்தியும் காவல் துறையினர் கலைத்தனர். இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
துருக்கியில் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கியில் நீதித்துறை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ஓஸ்குர் ஓசெலை நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடந்த உட்கட்சித் தேர்தலில் ஓஸ்குர் ஓசெல் வெற்றி பெற்று தலைவரானார். ஆனால், அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, துருக்கி நீதிமன்றம் ஓஸ்குர் ஓசலின் தலைமைப் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக, முன்பு தலைவராக இருந்த பழம்பெரும் தலைவர் கெமால் கிலிக்டாரோக்லுவை (Kemal Kılıçdaroğlu) தற்காலிகத் தலைவராக நீதிமன்றம் மீண்டும் நியமித்தது. இந்தத் தீர்ப்பை ஓஸ்குர் ஓசெல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் “நீதித்துறை வாயிலாக நடத்தப்பட்ட சதி” என கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி அங்காரா கவர்னர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, துருக்கி கலவரத் தடுப்பு போலீசார் CHP கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது ஓஸ்குர் ஓசலின் ஆதரவாளர்கள் போலீசாரை உள்ளே விடாமல் தடுக்க நாற்காலிகள், மேஜைகளைக் கொண்டு தற்காலிகத் தடுப்புகளை அமைத்துப் போராடினர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பயங்கர கைகலப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
பொதுமக்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்தும் தடியடி நடத்தியும் காவல் துறையினர் கலைத்தனர். இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகள், மிளகாய்ப் பொடி ஸ்பிரே மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி மக்களைக் கலைக்க முயன்றனர். இதனால் ஓஸ்குர் ஓசெல் போலீசாரால் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து “நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறோம்” என்று அவர் எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார். அடுத்தடுத்த இச்சம்பவங்களால் துருக்கியில் பதற்றம் நிலவுகிறது.

