Last Updated:
“சில மணிநேரங்களில் உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமெரிக்க விசா பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரூபியோ, அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்ற வாஷிங்டனின் நிலைப்பாட்டை ரூபியோ வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ரூபியோ, “அடுத்த சில மணிநேரங்களில் உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். கடந்த 48 மணிநேரத்தில் நாங்கள் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்; இருப்பினும், இன்னும் சில பணிகள் எஞ்சியுள்ளன.” என அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அதிபர் டிரம்ப் AMERICA FIRST என வெளிப்படையாக கூறுவது போல, இந்தியாவின் நிலைப்பாடும் INDIA FIRST என்பது தான் என்றார். இரு நாட்டு தலைவர்கள் தங்கள் நாட்டின் நலனுக்கான முடிவுகளையே எடுப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
“சில மணிநேரங்களில் உலகிற்கு ஒரு நற்செய்தி…” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ


