சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் மேற்கு இந்தியாவுக்கு இடையிலான விமான போக்குவரத்து இணைப்புகள் விரிவாக்கப்படவுள்ளன.
இதற்கமைய, அகமதாபாத் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் ஜூன் 19 ஆம் திகதி முதல் தொடங்கப்பட உள்ளன.
இந்த புதிய வழித்தடத்தில் ‘ஃபிட்ஸ்ஏர்’ (FitsAir) நிறுவனம் வாரத்திற்கு மூன்று நாட்கள் விமான சேவைகளை இயக்கவுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள்
இதன் மூலம், இதற்கு முன் பிற இடங்களின் வழியே பயணிப்பதால் ஏற்பட்ட சுமார் ஒன்பது மணி நேரப் பயண நேரம், தற்போது வெறும் மூன்று மணி நேரமாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணங்களுக்கான தேவை
இந்தியாவின் பிற நகரங்களில் இருந்து நேரடி விமான சேவைகள் இருந்தாலும், அகமதாபாத் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு முக்கிய மையமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநில மக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான அதிக தேவை மற்றும் இலங்கையுடனான கலாச்சாரத் தொடர்புகள் ஆகியவையே இந்த புதிய விரிவாக்கத்திற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

