மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலையின் பின்னணியில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போதைய எரிபொருள் விநியோக நிலவரம் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அளித்துள்ள தகவலில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் அச்சத்துடன் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தவறான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முன்பதிவு தளங்களைப் பயன்படுத்தவும், விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிஎன்ஜி மற்றும் மின்சார அல்லது இன்டக்ஷன் அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்த, மக்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் தங்களின் அன்றாடப் பயன்பாட்டில் எரிசக்தியை சேமிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், வீட்டு உபயோக பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி (போக்குவரத்து) ஆகியவற்றிற்கு, 100% விநியோகம் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
வர்த்தக ரீதியிலான எல்பிஜியைப் பொறுத்தவரை, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மருந்து, எஃகு, ஆட்டோமொபைல், விதை, விவசாயம் போன்ற துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர் விநியோகமும், சராசரியின் அடிப்படையில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே விநியோகம் மற்றும் தேவை ஆகிய இரண்டிலும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தியை அதிகரித்தல், நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரையிலும் அதிகரித்தல் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காகத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 மற்றும் எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணை, 2000 ஆகியவற்றின் கீழ், எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிக்கவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோக நிலையை கண்காணிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும், மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதை அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளுக்கு பல்வேறு கடிதங்கள் மற்றும் காணொளிக் கூட்டங்கள் மூலம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
போதுமான எரிபொருள் கையிருப்பு குறித்து மக்களுக்கு தகவல்களை அளிக்கும் வகையில், பொதுத் தகவல்தொடர்பு அவசியம் என்பதை மத்திய அரசு 27.03.2026 மற்றும் 02.04.2026 தேதியிட்ட கடிதங்கள் மூலம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
