Last Updated:
தமிழக வீரர் சாய் சுதர்சன் 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் சென்னை அணி தொடரை விட்டு வெளியேறி விடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று, முதலில் பந்துவீசுவதாகத் தீர்மானித்தார். இதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
குஜராத் அணியின் துவக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகிய இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சைத் தும்சம் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12.2 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 37 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன், சிஎஸ்கே பந்துவீச்சை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடித்தார். அவர் 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இவர்களுக்குப் பின் வந்த விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், வெறும் 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 229 ரன்கள் குவித்துள்ளது.

