Last Updated:
குருவை, சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்றுத் தர நடவடிக்கை தேவை முதலமைச்சருக்கு காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
வரும் குருவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை காவிரி நீரையும் சேர்த்து தமிழகத்திற்கு பெற்றுத் தர முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய மணியரசன், காவிரி நீர் ஆண்டில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மாதாந்திர தண்ணீரை முறையாக வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். எனவே, நிலுவையில் உள்ள நீரையும், இந்த மாதத்திற்கான தண்ணீரையும் உடனடியாக பெற்றுத் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மேகேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு சட்டவிரோதமாக அணை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் வல்லுநர் குழுவை அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி அணை கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் செங்கிப்பட்டி, திருத்துறைப்பூண்டி மற்றும் கொற்கை பகுதிகளில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதை மணியரசன் சுட்டிக்காட்டினார்.
வேளாண் நிலங்களை பாதிக்கும் இந்த சிப்காட் திட்டங்களுக்கான அனுமதியை தற்போதைய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின்படி, டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், பெரிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும், கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்ய தமிழக குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர், கர்நாடகாவுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் மணியரசன் குற்றம் சாட்டினார். எனவே, தமிழக அதிகாரிகளிடம் உண்மை நிலவரங்களை கேட்டறிந்து, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை பதவியிலிருந்து நீக்க இந்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

