கோலாலம்பூர்:
மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, பிகேஆர் (PKR) கட்சியின் முக்கியத் தலைவர்களான டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமட் ஆகியோர் தங்களின் நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் துறை (கூட்டரசு பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ, நிக் நஸ்மியுடனான தனது 18 ஆண்டுகால அரசியல் நட்பு குறித்து மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் தங்களின் பாண்டான் (Pandan) மற்றும் செத்தியாவங்சா (Setiawangsa) நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாகக் காலி செய்துவிட்டு, ‘பார்ட்டி பெர்சாமா மலேசியா’ (Parti Bersama Malaysia) கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
அவர்களின் இந்த அரசியல் விலகல் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹன்னா இயோ, “கடந்த 2008-ஆம் ஆண்டு எனது முதல் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போதுதான் எனக்கு நிக் நஸ்மியைத் தெரியும். அப்போது நாங்கள் இருவரும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட இளம் அரசியல் கைக் குழந்தைகள். உடல் அளவிலும் சரி, அனுபவத்திலும் சரி நாங்கள் இருவருமே சிறியவர்கள். ஆனால், மலேசிய அரசியலையே மாற்றியமைத்த அந்தப் பொதுத்தேர்தலில் நாங்கள் இருவரும் வெற்றி பெற்றோம்,” என்று ஹன்னா இயோ தனது Facebook பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
ஹன்னா இயோ சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற சபாநாயகராகப் பொறுப்பேற்றபோது, நிக் நஸ்மி அவரது துணைச் சபாநாயகராகப் பணியாற்றினார். மாணவர்களை மாநில நிர்வாகத்தில் ஈடுபடுத்தும் ‘ADUN Muda Selangor திட்டத்தைத் தொடங்க ஹன்னா இயோவை ஊக்குவித்ததே நிக் நஸ்மிதான்.
அரசியலைத் தாண்டி தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த பிணைப்பு இருந்ததாகக் குறிப்பிட்ட ஹன்னா இயோ, “நான் முதல்முறை கர்ப்பமாக இருந்தபோது, லண்டனில் ஒரு தலைமைத்துவப் பயிற்சி வகுப்பிற்காக நிக் நஸ்மியுடன் சென்றிருந்தேன். அப்போது எனக்கு ‘காங்குங் பெலாச்சான்’ (Kangkung Belacan) சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. லண்டன் தெருக்களில் எனக்காக ஒரு மலேசிய உணவகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக நிக் நஸ்மி என்னுடன் நீண்ட தூரம் நடந்து வந்தார்,” என்ற நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஹன்னா இயோவின் சுயசரிதை புத்தகமான ‘பிகமிங் ஹன்னா’ (Becoming Hannah) அவதூறு தாக்குதலுக்கு உள்ளானபோது, நீதிமன்றத்தில் களம் இறங்கி ஹன்னாவிற்கு ஆதரவாக நிக் நஸ்மி சாட்சியம் அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2018-இல் இருவரும் கோலாலம்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மாறினர் (ஹன்னா இயோ – சிகாம்புட், நிக் நஸ்மி – செத்தியாவங்சா). பின்னர், 2022-இன் இறுதியில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையிலும் இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். நிக் நஸ்மி ஒரு “சிறந்த அமைச்சர்” என்று பாராட்டிய ஹன்னா இயோ, அவர் 2025 ஜூலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோதும், தற்போது எம்பி பதவியைத் துறந்தபோதும் தனக்குப் பெரும் இழப்பாக உணர்வதாகக் கூறினார்.
சையத் சாதிக், அமீரா ஆயிஷா (MUDA), ஷாஃபி அப்டால் (Warisan) மற்றும் தற்போது ரஃபிஸி – நிக் நஸ்மி எனப் பலரும் வெவ்வேறு அரசியல் பாதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரிந்து சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஹன்னா இயோ, அவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“நமது அரசியல் சின்னங்கள் (Logos) மற்றும் டி-ஷர்ட்டுகள் ஒன்றாக இல்லாததால், நாம் ஒருவரையொருவர் வெறுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆதரவாளர்களும் இளம் அரசியல்வாதிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கைகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் மட்டுமே போராடுங்கள், அதைத் தனிப்பட்ட பகையாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.
அரசியல் மேடைகளும், கொடிகளும் இறக்கப்பட்ட பிறகு, மனிதநேயமும் நட்புமே எஞ்சியிருக்கும். அரசியலில் உங்களின் உண்மையான எதிரி யார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஒரு சிறிய போரில் வெற்றி பெற்றுவிட்டு, ஒட்டுமொத்த யுத்தத்தையே இழப்பதில் எந்தப் பயனும் இல்லை,” என்று ஹன்னா இயோ முதிர்ச்சியான அரசியல் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.




