கோலாலம்பூர்:
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (மலேசியா) நிறுவனம் தனது ஊழியர் ஒருவரை வஞ்சிக்கும் நோக்கில் பழிவாங்கும் பொருட்டு பணிநீக்கம் செய்தது செல்லாது என மலேசியத் தொழில்துறை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு 153,200 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ‘சீனியர் கிரெடிட் ஸ்பெஷலிஸ்டாக’ பணியாற்றிய ஆர். குகேந்திரன் என்பவர், தனது மேலதிகாரியால் பல வருடங்களாகப் பணி இடத்தில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும், மன உளைச்சல்களுக்கும், அவமதிப்புகளுக்கும் ஆளாக்கப்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றத் தலைவர் அகஸ்டின் அந்தோணி தெரிவித்தார்.
பணியிடத்தில் நிலவிய இந்த நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் (Toxic Work Environment) குறித்துப் பாதிக்கப்பட்ட ஊழியர் நியூயார்க்கில் உள்ள நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார். ஆனால், புகாரைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் அளிக்கப்பட்ட மூன்றே மாதங்களில் அந்நிறுவனம் பழிவாங்கும் நோக்கில் குகேந்திரனைப் பணிநீக்கம் செய்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தவறிழைத்த அதிகாரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போக்கு மிகவும் வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்ட நீதிமன்றத் தலைவர், இந்தத் தீர்ப்பின் மூலம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு எப்போதும் நிலைநாட்டப்படும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து, பணியிடங்களில் நடக்கும் இவ்வாறான அதிகார துஷ்பிரயோகங்கள், பகடி வதைகள் (Workplace Bullying) மற்றும் நிறுவனங்களின் நியாயமற்ற பழிவாங்கல் நடவடிக்கைகள் இனிமேலும் தொடராமல் இருக்க மலேசிய மனிதவள அமைச்சு (KESUMA) மற்றும் பணியிட பாதுகாப்பு, சுகாதார இலாகா (DOSH) ஆகியவை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது மேல்விசாரணை நடத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அவ்வாறு செய்வதன் மூலம், மலேசியாவில் பணியிட பகடி வதை மற்றும் ஊழியர் சுரண்டலுக்கு எதிராக அரசாங்கம் தனது கடுமையான நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




