Last Updated:
கர்நாடகா துபரே யானை முகாமில் யானை மோதலில் சென்னையின் ஜூனேஷ் உயிரிழப்பு, கணவர் ஜோயல் 20 லட்ச இழப்பீடு மத்தியிலும் மனைவியின் கண்களை தானம் செய்தார்
கர்நாடகா சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த பெண் யானைகள் மோதலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் யானைகள் மோதலில் சிக்கி சென்னையை சேர்ந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவத்தின் சோகக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த 33 வயதான ஜூனேஷ் என்ற பெண், தன் கணவர் மற்றும் 6 வயது மகளுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றார். இரண்டு நாட்கள் கர்நாடகாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்த ஜூனேஷ், இறுதியாக குடகு மாவட்டத்தில் உள்ள துபரே யானைகள் முகாமிற்கு சென்றுள்ளார்.
அடுத்த சில விநாடிகளில் தனக்கு என்ன நேர இருக்கிறது என்பதை அறியாத ஜூனேஷ், கணவர் மற்றும் மகளுடன் அங்கு நிலவிய ரம்மியமான சூழலையும், காவிரி ஆற்றில் யானைகள் குளிப்பதையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் கஞ்சன் என்ற யானை மார்தாண்டா என்ற யானையை கடுமையாக தாக்கியது.
கஞ்சன் யானை தாக்கியதில் நிலைகுலைந்த மார்த்தாண்டா யானை, கரையோரம் நின்றிருந்த ஜூனேஷ் மீது விழுந்தது. இதைக் கண்டு பதறிப்போன ஜூனேஷின் கணவர் ஜோயல், ஒரு கையில் தனது மகளையும், மற்றொரு கையில் மனைவியையும் காப்பாற்ற போராடினார். இருப்பினும் கஞ்சன் யானையின் தொடர் தாக்குதலால் எழுந்திருக்க முடியாமல் மார்த்தாண்டா யானை தவிக்க, அதன் அடியில் மாட்டிக் கொண்ட ஜூனேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்திய வனத்துறையினர் ஜூனேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிருக்கு போராடிய தன் மனைவியை காப்பாற்ற யாரும் முன்வராதது கடும் மன வேதனையை ஏற்படுத்துவதாக ஜூனேஷின் கணவர் ஜோயல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஜூனேஷின் குடும்பத்திற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஜூனேஷின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த சோகத்திலும் உயிரிழந்த ஜூனேஷின் கண்களை தானமாக கொடுப்பதாக அவரது கணவர் ஜோயல் கூறியிருக்கிறார். அதன்படி, ஜூனேஷின் கண்கள் அறுவை சிகிச்சை செய்து தானமாக பெறப்பட்டது. தனது மனைவி இந்த உலகை விட்டு சென்ற சோகத்திலும், மனைவியின் கண்கள் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து உலகை காண வேண்டும் என எண்ணிய ஜோயலின் செயல் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


