Last Updated:
இன்று நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 180 ரன்கள் எடுத்துள்ளது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புதிய சாதனையை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்படுத்தியுள்ளார்.
டாடா ஐபிஎல் 2026 சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான மிக முக்கியமான போட்டியின் போது, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
சென்னை மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், அவர் 1000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், 65 இன்னிங்ஸ்களில் விளையாடி 1547 ரன்கள் குவித்துள்ள முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி முதலிடத்தில் நீடிக்கிறார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 55 இன்னிங்ஸ்களில் 1498 ரன்கள் எடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மிக அதிவேகமாக வெறும் 25 இன்னிங்ஸ்களிலேயே 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் அடித்த ரன்களின் மூலம் முரளி விஜய்யின் சாதனையை முறியடித்து டாப் 3 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக 30 இன்னிங்ஸ்களில் 928 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய் தற்போது நான்காவது இடத்திற்கும், 21 இன்னிங்ஸ்களில் 848 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி ஐந்தாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். தோனி மற்றும் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக சென்னை மண்ணில் 1000 ரன்களைக் கடந்த மூன்றாவது சிஎஸ்கே வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் இதன் மூலம் பெற்றுள்ளார்.
இன்றைய போட்டியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 180 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.
May 18, 2026 10:00 PM IST

