கொஸ்கம, தாவல்கொட பகுதியில் உள்ள மதகொன்றில் (Sluice) நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழலில் (Whirlpool) சிக்கி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர் வழங்கல் சபையில் ஊழியராக பணியாற்றி வந்த கொஸ்கம, பரணகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய லபுகமகே மலிந்த சந்திப்ப மற்றும் கொஸ்கம, பரணகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய கமகே கவிஷ கிம்ஹான் அபேரத்ன ஆகிய இருவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் மேலும் இரண்டு நண்பர்களுடன் இணைந்து கடந்த 15-ஆம் திகதி, குறித்த மதகுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு ஏனைய இருவரும் கரையில் இருக்க, இந்த இரு இளைஞர்கள் மட்டும் மதகில் இறங்கி நீராடியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்ட கடுமையான நீர்ச்சுழலில் சிக்கி அவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பின்னர் கரையில் இருந்த மற்ற இரு நண்பர்களும் உடனடியாக ஓடிச் சென்று, நீரில் மூழ்கிய இளைஞர்களின் குடும்பத்தாருக்கு விபரத்தைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்களையும் மீட்டு, கொஸ்கம சாலாவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

