இந்திய கிரிக்கெட் ஆடவர் அணிக்கு புதிய பயிற்சியாளர் விரைவில் நியமிக்கப்பட உள்ள நிலையில், அவருக்கு சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடைய உள்ளதால், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக விண்ணப்பங்களையும் வாங்கியுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மூத்த வீரர்கள் பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது பணி விவரங்கள் மற்றும் சம்பளம் தொடர்பான தகவல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்படும் தலைமை பயிற்சியாளர் ஜூலை 1, 2024 முதல் டிசம்பர் 31, 2027 வரை 3.5 ஆண்டுகள் மும்பையில் இருக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அணியை உருவாக்கி, அதை நிர்வகித்து, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவங்களிலும் வெற்றியை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சியாளர்கள் மற்றும் துணை பயிற்சியாளர்களை கொண்ட குழுவை வழிநடத்துவதோடு, அவர்களின் பணிகளையும் கண்காணிக்க வேண்டியது தலைமை பயிற்சியாளரின் பொறுப்பு என்றும், அணிக்குள் ஒழுக்கத்தை பேணிக்காத்தல் முக்கியமான பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்… டிவி மற்றும் மொபைலில் பார்ப்பது எப்படி?
அத்துடன் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படும் நபர் சர்வதேச அளவில் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்றும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஏதாவது ஒரு நாட்டின் அணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊதியத்தை பொறுத்தவரை அனுபவத்திற்கு ஏற்ற வகையில் பேச்சுவார்த்தைக்கு உரியது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை ஊதியம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
