Last Updated:
தீவிர விஜய் ரசிகரான வெங்கடேஷ் ஐயரின் இந்த ஸ்டைலான கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் சில நிமிடங்களிலேயே காட்டுத்தீயாகப் பரவி வைரலானது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் அரைச்சதம் அடித்த ஆர்சிபி வீரர் வெங்கடேஷ் ஐயர் விஜய் ஸ்டைலில் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய அதிரடி ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 182.50 ஆக இருந்தது.
போட்டியின் 16.3 ஓவரில், பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோகி பெர்குசன் வீசிய பந்தை மிட்-ஆஃப் திசையில் சிக்ஸராக மாற்றி, ஐபிஎல் 2026 தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அவரது 13-வது அரைசதமாகும். இவரது அதிரடியால் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
வெங்கடேஷ் ஐயர் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தவுடன், மைதானத்திலேயே முதலமைச்சர் விஜய்யின் மெர்சல் பட சீனை மீண்டும் ரீ கிரியேட் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தீவிர விஜய் ரசிகரான வெங்கடேஷ் ஐயரின் இந்த ஸ்டைலான கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் சில நிமிடங்களிலேயே காட்டுத்தீயாகப் பரவி வைரலானது.
இந்த 2026 சீசனில் தனது 4-வது போட்டியில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், தற்போது 114 ரன்களுடன் மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். இந்த போட்டியில் ஆர்சிபி அணி பஞ்சாப் அணியை வென்றால், சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


