Last Updated:
நீட் 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளி பி.வி. குல்கர்னி, உதவியாளர் மனிஷா வாக்மரே உட்பட ஏழு பேரை சிபிஐ கைது, பல லட்சம் லஞ்சம் வசூல் வெளிச்சம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பேராசிரியர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 -ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீட் தேர்வு ரத்தானது. வினாத்தாள் கசிந்தது எப்படி? அதில் யார் யாருக்கு தொடர்பு உண்டு? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டது. அதில் ஏற்கனவே சிலர் கைதான நிலையில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட புனேவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர், பி.வி. குல்கர்னி என்பவரை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பி.வி. குல்கர்னி தேசியத் தேர்வு முகமையின் நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை அணுகும் அதிகாரம் அவருக்கு இருந்துள்ளது. அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நீட் வினாத்தாள்களை முன்கூட்டியே கைப்பற்றிய குல்கர்னி ஏப்ரல் கடைசி வாரத்தில் புனேவில் உள்ள தனது இல்லத்தில் ஏற்கனவே கோச்சிங் கொடுத்து வந்த தனது மாணவர்களுக்கு, ரகசிய பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார்.
அப்போது வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு நீட் வினாக்களையும், அவற்றுக்கான விடைகளையும் அவர் முன்கூட்டியே வழங்கியதாகக் கூறப்படுகிறது. பேராசிரியர் ஒவ்வொரு கேள்விகளையும் சொல்லச் சொல்ல வினாத்தாள்களை விடையுடன் மாணவர்கள் நோட்டில் எழுதி வைத்துப் படித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. தேர்வுக்குப் பிறகு ஆய்வு செய்ததில், அந்த ரகசிய வகுப்பில் கொடுக்கப்பட்ட வினாக்களும், மே 03 அன்று கேட்கப்பட்ட அசல் வினாக்களும் துல்லியமாகப் பொருந்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஒவ்வொரு மாணவரிடமிருந்தும், பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது விசாரணையில் உறுதியாக குல்கர்னிக்கு உதவியாகச் செயல்பட்ட மனிஷா வாக்மரே என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் மொத்தம் ஏழு பேரை, சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மங்கி லால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர் ராஜஸ்தானின் சீகர் வழியாக வினாத்தாள் கசிவு விற்று பல லட்ச ரூபாய் லாபம் பார்த்தவர்கள். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pune,Maharashtra
விஸ்வரூபம் எடுக்கும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. பேராசிரியரை தொடர்ந்து சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்..


