Last Updated:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏற்கனவே விளையாடிய அனுபவம் கொண்ட குல்தீப், 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் அணியில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஆகிய இரு அணிகளுக்கும் முக்கிய வீரர்கள் விலகியதால் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளிலும் உள்ள முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது வலது காலில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அவருக்குப் பதிலாக, இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சிஎஸ்கே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏற்கனவே விளையாடிய அனுபவம் கொண்ட குல்தீப், 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் அணியில் இணைந்துள்ளார்.
ஆர்சிபி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கட்டாய உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால், இந்த சீசன் முழுவதிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மாற்றாக இங்கிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளிசனை 1.6 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி ஒப்பந்தம் செய்துள்ளது. கிளிசன் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளே-ஆஃப் சுற்றுக்கான போட்டி கடுமையாக இருக்கும் வேளையில், இந்த அதிரடி மாற்றங்கள் இரு அணிகளின் பந்துவீச்சு பலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இங்கிலாந்து வீரர் கிளிசன் தனது அனுபவத்தால் ஆர்சிபிக்கு வலு சேர்ப்பார் என்றும், இளம் வீரர் குல்தீப் சிஎஸ்கே-வின் வேகப்பந்து வீச்சில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


